குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2020 4:00 AM IST (Updated: 17 Feb 2020 11:07 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை,

சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை கோர்ட்டு முன்பு சமூக நீதி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். வக்கீல்கள் மலரவன், ஷாஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகநீதி வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த வெண்மணி, பாலமுருகன், மயில்வாகனன், ரமேஷ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது என்றும் கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டம் குறித்து சமூகநீதி வக்கீல்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

மதத்தின் அடிப்படையில் குடிமக்களை பிளவு படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறையை கட்டவிழ்த்து போராட்டக்காரர்களை கலைத்தது போல இந்த போராட்டத்திலும் நடைபெற்றுள்ளது. ஜனநாயக முறையில் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யும் பொதுமக்களை, தமிழக அரசு காவல்துறை மூலம் அச்சுறுத்தி வருகிறது. இதனை சமூக நீதி வக்கீல்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு, இந்த சட்ட திருத்தத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story