குடும்ப செலவுக்கு கணவர் பணம் கொடுக்காததால் விஷம் குடித்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
மயிலாடுதுறை அருகே குடும்ப செலவுக்கு கணவர் பணம் கொடுக்காததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறை அருகே மங்கநல்லூர் கப்பூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மனைவிகள். இதில் 3-வது மனைவி அபிநயா (35). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜயபாலன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனால் அபிநயாவுக்கு குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அபிநயாவுக்கும், விஜயபாலனுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த அபிநயா விஷத்தை(எலி மருந்து) குடித்து மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story