பனை மரங்கள் வெட்டி அழிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
அதிக பயன்களை கொடுத்து வரும் பனை மரங்களை மானாமதுரை பகுதியில் வெட்டி அழிக்கப்படுகின்றன. எனவே இந்த பனை மரங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை,
மனித இனத்திற்கு இயற்கை தந்த பெரும் கொடைகளில் ஒன்றாக உள்ளது பனை மரம். தண்ணீர் இல்லாத இடத்தில்கூட வளரும் இந்த பனைமரம் மனிதர்களுக்கு சலிப்பு தன்மை இல்லாத வகையில் அதிக அளவில் பல நல்ல பலன்களை தரக்கூடியதாக இருந்து வருகிறது. பனை மரத்திற்கு தமிழ் மரம் என்று மற்றொரு பெயரும் உள்ளது. இந்த பனையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் ஒவ்வொன்றும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு மனித இனத்திற்கு அதிக பயன்கள் தரக்கூடிய இந்த பனை மரங்கள் தற்போது தமிழகம் முழுவதும் அதிக அளவில் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இவ்வாறு வெட்டி அழிக்கப்படும் பனை மரங்கள் செங்கல் சூளைக்காக கொண்டு செல்லப்படுவது மிகவும் வேதனையளிக்கும் செயலாக உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த பனை மரங்கள் மானாமதுரை, சிவகங்கை, கல்லல், சாக்கோட்டை, சிங்கம்புணரி, பிரான்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஏராளமாக உள்ளது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். இந்த பழமொழி யானைக்கு மட்டும் பொருந்தாது பனை மரத்திற்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்கும் வகையில் இதற்கு முன்பு இருந்த பண்டைய விவசாயிகள் தங்கள் பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் வளர்ப்பில் அதிக ஆர்வத்தை காட்டி வளர்த்தனர்.
இதன் காரணமாக மானாமதுரை பகுதியில் கண்மாய், ஊருணி, வாய்க்கால்கள், பாசன கிணறுகள் உள்ளிட்ட இடங்களில் பெருமளவு பனை மரங்கள் காணப்பட்டது. கடும் வறட்சியை தாங்கி வளர கூடிய மரம் என்பதாலும், நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் வைத்திருக்கும் மரம் என்பதாலும் தமிழக அரசு இந்த பனை மரத்தை தேசிய மரமாக அறிவித்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மானாமதுரை பகுதியில் ஏராளமான அளவில் காணப்பட்ட பனை மரங்களின் எண்ணிக்கை தற்போது பெருமளவு குறைந்து விட்டது.
மேலும் இங்குள்ள அரசு நிலங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் உள்ள பனை மரங்களை சிலர் வெட்டி அழித்து அந்த பனை மரக்கட்டைகளை செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்துவதற்கு அனுப்பி வருவதால் இந்த பகுதியில் பனை மரங்கள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு இந்த பகுதியில் பனை மரங்கள் வெட்டப்படுவதை இங்குள்ள வனத்துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு வருகின்றனர். இதனால் சட்டத்திற்கு விரோதமான முறையில் தற்போது இங்குள்ள பனை மரங்கள் அதிக அளவில் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5ஆண்டுகளில் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 70சதவீதபனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வருகிறது. மேலும் இதற்கு முன்பு மானாமதுரையில் இருந்து தெ.புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் சாலையின் இருபுறத்திலும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது அங்கு ஒருசில பனை மரங்கள் மட்டுமே உள்ளது. மற்ற மரங்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகளின் ஆதரவோடு வெட்டி விற்பனை செய்துள்ளதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே மனித இனத்திற்கும் மட்டுமில்லாமல் பல்வேறு வகையில் பயனை தரும் பனை மரங்களை வெட்டுவதற்கு இந்த பகுதியில் உள்ள வனத்துறை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும். இதுதவிர பனை மரங்களை வெட்டுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தற்போது உள்ள ஒருசில பனை மரங்களையாவது காப்பாற்ற முடியும் என்று இப்பகுதி விவசாயிகள், சமூக நல ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story