திருவாரூரில், தையல் கலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - நிர்வாகி மயங்கி விழுந்ததால் பரபரப்பு


திருவாரூரில், தையல் கலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - நிர்வாகி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 3:45 AM IST (Updated: 18 Feb 2020 12:21 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் தையல் கலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ. தையல் கலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ராகவன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் சுந்தரம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தையல் கலைஞருக்கு வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். வீடு சார்ந்த தையல் தொழிலாளர்களுக்கு வணிகமுறை மின் கட்டணமாக மாற்றும் முறையை கைவிட வேண்டும். நல வாரிய செயல்பாட்டினை எளிமைப்படுத்தி பண பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில தலைவர் சுந்தரம் பேசியபோது வெயிலின் தாக்கத்தால் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நிழலில் நின்று ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்காததால் நிர்வாகி மயங்கி விழுந்தார் எனவும், இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story