மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும் - அமைச்சர் பாஸ்கரன் தகவல்


மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும் - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2020 10:30 PM GMT (Updated: 17 Feb 2020 6:55 PM GMT)

மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் எனக் கூறி முதல்-அமைச்சரிடம் நான் சண்டை போட்டுள்ளேன் என்று அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையிலும், அவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இங்கு நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதி உடைய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பொதுவாக சிவகங்கை மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாகவும், இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள இளைஞர்கள் வேலையை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

இதை தடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு முறையும் சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்து அவரிடம் சண்டையும் போட்டுள்ளேன். தமிழக அரசு தமிழர்களின் நலனில் அதிக அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. விரைவில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து முகாமில் தேர்வு செய்யப்பட்ட 65நபர்களுக்கு அமைச்சர் பணி நியமன ஆணை மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

முகாமில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலர் மணிகணேஷ், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆவின் சங்க தலைவர் அசோகன், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்துறை தலைவர் சசிக்குமார், கூட்டுறவு பண்டகச்சாலை துணைத் தலைவர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம்இளங்கோ, வேலைவாய்ப்பு அலுவலர் ராஜலெட்சுமி, காரைக்குடி தாசில்தார் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக முகாம் நடைபெற்ற இடத்திற்கு கார்த்திசிதம்பரம் எம்.பி., கே.ஆர்.ராமசாமி,எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story