கண்டலேறு அணையில் போதிய இருப்பு உள்ளதால் பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஆந்திர அதிகாரிகள் தகவல்


கண்டலேறு அணையில் போதிய இருப்பு உள்ளதால்   பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு   ஆந்திர அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2020 4:00 AM IST (Updated: 18 Feb 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால், பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்குன்றம், 

கடந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் முழவதுமாக வறண்டு காணப்பட்டன. இதனால் சென்னையில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடியது.

இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் விவசாய கிணறுகளிலிருந்தும், வேலூர் மாவட்டத்திலிருந்து ரெயில்களில் குடிநீர் கொண்டு வந்தும் சென்னை மக்களுக்கு வினியோகம் செய்தனர்.

இந்நிலையில் ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதத்தில் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார் ஆகியோர் ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன்ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கண்டலேறு அணை நீர் மட்டம்

ஆனால், அப்போது கண்டலேறு அணையில் போதியளவு தண்ணீர் இல்லாத காரணத்தால், பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க முடியாது என்றும், மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் ஜெகன்மோகன்ரெட்டி உறுதி அளித்தார்.

அதன்படி, ஆகஸ்டு மாதத்தில் சோமசீலா அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சோமசீலா அணையிலிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டதால், கண்டலேறு அணையின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதியன்று கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் 28-ந் தேதியன்று பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது அந்த அணையில் 36 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து வினாடிக்கு 3,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு நேற்று வினாடிக்கு 264 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.

ஆந்திர அதிகாரிகள்

இந்த நிலையில், செப்டம்பர் 28-ந்தேதி முதல் நேற்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 5.739 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள் ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், ஜூன் முதல் செப்டம்பர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும். அதன்படி தற்போது 5.739 தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

இந்த முறை குறைந்தது 6 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க முடிவு செய்ததாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் பிரச்சினை ஏற்படாது

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி வரை நீர்மட்டம் 30.25 அடியாக பதிவானது. 1,798 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 264 கனஅடியாக வந்து கொண்டிருந்தது.

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 453 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story