காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்


காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 18 Feb 2020 4:30 AM IST (Updated: 18 Feb 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை. வீட்டுமனைப்பட்டா, பசுமை விடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன.

அவை அனைத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய்த் துறையின் சார்பாக காஞ்சீபுரம் வட்டத்தில் 14 பயனாளி களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இருளர் இன மக்களுக்கு முதியோர் உதவிக்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.56 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகையும், சிறுதொழில் செய்திட தலா ரூ.25 ஆயிரம் வீதம் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 500 அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story