ரெயில் நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் டவுன் பஸ் இயக்கக்கோரி பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு


ரெயில் நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் டவுன் பஸ் இயக்கக்கோரி பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 Feb 2020 4:15 AM IST (Updated: 18 Feb 2020 2:42 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் டவுன் பஸ் இயக்கக்கோரி பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி மூதாட்டி காளியம்மாள் என்பவர் தனது மகன் தியாகராஜன் என்பவர் தன்னை முறையாக கவனித்து கொள்வது இல்லை. எனவே நான் ஏற்கனவே அவர் பெயரில் எழுதிய தான செட்டில்மென்டை ரத்து செய்து, மேற்கண்ட சொத்தை தன்னை பராமரிக்காத மகனிடம் இருந்து திரும்ப பெற்று தர வேண்டுமென மனு அளித்திருந்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்டு 42 நாட்களில் முதியோர் பராமரிப்பு சட்டம் 2007-ன் படி காளியம்மாளை முறையாக கவனித்து கொள்ளாத தனது மகனுக்கு ஏற்கனவே எழுதி வழங்கப்பட்ட தான செட்டில்மென்டை ரத்து செய்து, மீண்டும் காளியம்மாளுக்கே மேற்படி சொத்து மாற்றி வழங்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், மாவட்ட செயலாளர் தியாகு கொடுத்த மனுவில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி உள்பட அர்ச்சகர்கள் போன்றவர்கள் 10 ஆண்டுகளாக ஒரே கோவிலில் பணியாற்றுவதால் ஊழல் நடைபெற்று உள்ளது. கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை தெட்சிணா மூர்த்தி விற்பனை செய்து விடுகிறார். எனவே ஆடு, மாடு, கோழி போன்றவற்றை பொது ஏலத்திற்கு கொண்டுவர வேண்டும்.

கோவிலில் 3 கால பூஜை நடைபெறவில்லை. கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களை வைத்து கோவிலை சுத்தம் செய்து வருகின்றனர். அர்ச்சகர்கள் கோவிலில் திருமணம் செய்பவர்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்கின்றனர். மேலும் தேங்காய் உடைக்கவும் பணம் வசூல் செய்கின்றனர். அரசு அனுமதியில்லாமல் சொந்தமாக நன்கொடை ரசீது அடித்து தனிநபர் ஒருவர் வசூல் செய்து வருகின்றார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

கூட்டத்தில் பா.ஜ.க. நகர தலைவர் சுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகளுடன் கொடுத்த மனுவில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் புகைப்படம் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். திலகர் திடலில் தொடங்கி வடக்கு ராஜவீதி வழியாக காமராஜபுரம் வரை செல்லும் சாலை மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பேராங்குளம் செல்லும் சாலையையும் சீரமைக்க வேண்டும். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இரவு நேரத்தில் வரும் பயணிகளின் வசதிக்காக டவுன் பஸ் இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் பழனியப்பா கார்னர் வழியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

ஆலங்குடி நெம்பக்கோட்டையை சேர்ந்த சண்முக நாதன் என்பவர் கொடுத்த மனுவில், தற்போது அரசு அறிவித்த காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதற்கட்ட பணியில் எங்கள் பகுதியாக ஆலங்குடியினையும் சேர்த்து கொள்ள வேண்டும். எங்கள் பகுதியில் வருங்காலங்களில் மழையளவு குறைவாக இருக்கும். எனவே முதற்கட்ட பணியில் எங்களது பகுதியையும் இணைத்து எங்களுக்கு காவிரி உபரிநீரை வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

Next Story