சின்னகாளிபாளையத்தில் பசுமை வீடுகள் கட்டும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


சின்னகாளிபாளையத்தில் பசுமை வீடுகள் கட்டும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Feb 2020 4:30 AM IST (Updated: 18 Feb 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே சின்னகாளிபாளையம் கிராமத்தில் பசுமை வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெரூர் வடபாகம் ஊராட்சி சின்னகாளிபாளையம் கிராமத்தில் 29 பேருக்கு ரூ.60 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான, முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன்கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான கட்டுமானப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வீடுகள் கட்டுவதற்கான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் தான், சூரிய சத்தியுடன்கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகாளிபாளையம் கிராமத்தைச்சேர்ந்த 29 பேருக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வீடுகள் வீதம் ரூ.60 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான சூரிய சக்தியுடன்கூடிய பசுமை வீடுகள் கட்டித்தர ஆணைகள் வழங்கப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. வீடுகள் மட்டுமல்ல, சாலைகள், தெருவிளக்குகள், சமுதாயக்கூடம், நாடகமேடை என அனைத்து அடிப்படைத் தேவைகளும் விரைவில் பூர்த்தி செய்யப்படும். மேலும் பின்தங்கிய ஏழை, எளிய மக்கள் வசிக்கக்கூடிய அதிக குடிசைகள் இருக்கக்கூடிய சின்னகாளிபாளையம் கிராமத்தை கரூர் மாவட்டத்தில் மாதிரி கிராமமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

பாப்புலர் முதலியார் வாய்க்கால் விரிவாக்கம் என்பது பொதுமக்களின், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கிட்டத்தட்ட ஒரு வருடமும் இரண்டுமாத காலமுமாக இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1கோடி ரூபாய் சொந்த நிதியில் செலவுசெய்து இத்திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றேன். 8.5 கிலோமீட்டர் நீளத்திற்கு சுமார் 27 அடி ஆழத்தில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றது. சின்னகாளிபாளையம் மற்றும் பெரிய காளிபாளையம் பகுதியில் உள்ள குளங்களுக்கு சென்ற ஆண்டே தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தண்ணீரானது பாப்புலர் முதலியார் வாய்க்கால் மூலம் கொண்டு சென்று நெரூர் வாய்க்கால் வரை கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் பாலமுருகன், நெரூர் வடபாக ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரைச்செல்வி. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story