சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.3½ கோடி போதை பொருள் பறிமுதல்


சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு   விமானத்தில் கடத்த முயன்ற ரூ.3½ கோடி போதை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Feb 2020 4:26 AM IST (Updated: 18 Feb 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.3½ கோடி மதிப்புள்ள 6 கிலோ 815 கிராம் போதை பொருளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்ககப்பிரிவில் இருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் பெரும் அளவில் போதை பொருள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வெளிநாட்டுக்கு சரக்ககப்பிரிவில் இருந்து கொரியர் மூலமாக அனுப்ப இருந்த பார்சல்களை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ஆஸ்திரேலியாவுக்கு ரிப்பன் ரோல்கள் என்ற பெயரில் பார்சல் ஒன்று இருந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் ரிப்பன் ரோல்களுக்கு நடுவே 57 பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, வெள்ளை நிற பவுடர் இருந்தது.

ரூ.3½ கோடி மதிப்பு

அதை பரிசோதித்தபோது அவை, ‘மீத்தாகுவாலோன்’ என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது. ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 815 கிராம் போதை பொருளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பார்சலில் இருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது போலி என்பது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள், மேல் நடவடிக்கைக்காக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த போதை பொருளை 30 நிமிடம் வாயில் வைத்திருந்தால் 8 மணிநேரம் வரை போதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அந்த போதை பொருளை கடத்த முயன்றது யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story