ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் திருடப்பட்ட 105 பவுன் நகைகள் மீட்பு; 6 பேர் கைது
ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் திருடப்பட்ட 105 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் 6 கொள்ளையர்களை கைது செய்தார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு, ரோந்து நடவடிக்கைகளில் இருந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
எனவே முற்றிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் தினசரி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் தனிப்படை போலீசார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்படாத சில திருட்டு வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனை, கண்காணிப்பு என்று ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் தனிப்படை போலீசார் ஈரோடு-கரூர் ரோடு சோலார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூர் ரோட்டில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள். அதில் வந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக போலீசாரிடம் பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடைய மகன் சதிஸ் என்கிற வெங்கடேஸ்வரன் (வயது 30), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த அன்புதாஸ் என்பவருடைய மகன் அய்யப்பன் (32) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சோதனை செய்தபோது வண்டியில் 42 பவுன் நகைகள் இருந்தன. மேலும், சில ஆயுதங்களும் வைத்திருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் முறைப்படி விசாரித்தபோது 2 பேரும் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சதிஸ் என்கிற வெங்கடேஸ்வரன், அய்யப்பன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 3 பேர் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஒரு வீட்டில் தங்கி இருந்த 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தஞ்சை பூதலூர் தாலுகா, விஸ்ணம்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகன் முத்துராஜ் (31), ராமநாதபுரம் மண்டபம் வாழந்திரவை பகுதியை சேர்ந்த மலைக்கண்ணன் என்பவருடைய மகன் மகேந்திரன் (28), திருபுலானி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருடைய மகன் அன்பு மணிகண்டன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல்வேறு திருட்டுகளில் தொடர்பு உடைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. போலீசாரின் முறையான விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் இருந்து 46 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. முத்துராஜ், மகேந்திரன், அன்பு மணிகண்டன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னிமலை அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் பாலாஜி (22) என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 17 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
இவ்வாறு 3 வேறு வேறு சோதனைகளில் பிடிபட்ட சதிஸ் என்கிற வெங்கடேஸ், அய்யப்பன், முத்துராஜ், மகேந்திரன், அன்புமணிகண்டன், பாலாஜி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு தாலுகா, அறச்சலூர், சென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், பவானி, சித்தோடு, ஆப்பக்கூடல் ஆகிய போலீஸ் நிலையங்களில் 16 வழக்குகளில் திருட்டு மற்றும் கொள்ளைபோன நகைகளும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் நிலைய எல்லைகளில் கொள்ளை போன நகைகளும் ஆகும். இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், திருட்டுக்கு பயன்படுத்திய திருப்புளிகள், கம்பிகள், ஊசி முனையாக செதுக்கப்பட்ட கம்பிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் டார்ச்லைட் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
கைதுசெய்யப்பட்ட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் நேற்று கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இவர்கள் மீது மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
போலீசாரிடம் பிடிபட்ட 6 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், எந்த வழக்கிலும் போலீசாரின் கையில் சிக்காமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வந்தனர். ஆனால் போலீசார் ஒவ்வொரு தடயங்களையும் சேகரித்து வைத்து, ஒவ்வொரு அசைவாக முன்னோக்கி சென்று கொள்ளை கும்பலை ஒட்டுமொத்தமாக பிடித்து உள்ளனர். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் 6 பேரை கைது செய்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சகாதேவன், ஏட்டுகள் எம்.பாலசுப்பிரமணியம், செந்தில், லோகநாதன், அறிவழகன் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டு தெரிவித்து ரொக்கப்பரிசு வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. அப்போது மீட்கப்பட்ட நகைகள், ஆயுதங்களை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்கார்த்திக் குமார், சார்லஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story