வேலைநிறுத்தத்துக்கு நோட்டீஸ்: மெட்ரோ ரெயில் தொழிற்சங்கத்துடன், தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை 2-ம் கட்டமாக இன்றும் நடக்கிறது
தொழிலாளர் உதவி நல ஆணையர் முன்னிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் தொழிற்சங்கத்தினர் நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்படாததால், 2-ம் கட்டமாக இன்றும்(செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடக்கிறது.
சென்னை,
மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அதை முறையாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்து சென்னை மெட்ரோ ரெயில் தொழிலாளர் சங்கத்தினர் வருகிற 25-ந்தேதிக்கு பிறகு மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிலாளர் நல ஆணையரிடம் நோட்டீஸ் வழங்கினர்.
முதற்கட்ட பேச்சுவார்த்தை
இதனையடுத்து தொழிலாளர் உதவி நல ஆணையர் முன்னிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை பாரிமுனை பஸ் நிலையம் அருகில் உள்ள குறளகத்தில் நடந்தது.
இதில் தொழிலாளர் உதவி நல ஆணையர் ஜெயலட்சுமி, தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன், இளங்கோவன் மற்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு கருத்துகள் தொழிற்சங்கங்களின் தரப்பிலும், மெட்ரோ ரெயில் நிர்வாக தரப்பிலும் முன்வைக்கப்பட்டன.
முதற்கட்ட பேச்சுவார்த்தையின் இறுதியில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது. மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரிகள் வரவேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் தெரிவித்ததாக தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story