கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல்: துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, எம்.எல்.சி.யாக தேர்வு ஓட்டுப்பதிவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்


கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல்:   துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, எம்.எல்.சி.யாக தேர்வு   ஓட்டுப்பதிவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
x
தினத்தந்தி 18 Feb 2020 5:01 AM IST (Updated: 18 Feb 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தலில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தேர்வு செய்யப்பட்டார். ஓட்டுப்பதிவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரிஸ்வான் ஹர்ஷத், கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக கர்நாடக மேல்-சபையில் ஒரு இடம் காலியாக இருந்தது.

அந்த ஒரு காலி இடத்திற்கு 17-ந் தேதி (அதாவது நேற்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சார்பில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, சுயேச்சையாக தேர்தல் மன்னன் பத்மராஜன், அனில்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதில் பத்மராஜனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இடைத்தேர்தல் புறக்கணிப்பு

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவுடன் அனில்குமார் களத்தில் இருந்தார். அவருக்கும், லட்சுமண் சவதிக்கும் இடையே ேபாட்டி ஏற்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அனில்குமாருக்கு ஆதரவு அளிப்பது இல்லை என்று காங்கிரஸ் தீர்மானித்தது.

இதையடுத்து தான் போட்டியில் இருந்து விலகுவதாக அனில்குமார் அறிவித்தார். ஆனால் வேட்பு மனுவை அவர் வாபஸ் பெறவில்லை. இதனால் போட்டியில் 2 பேர் இருந்ததால், ஏற்கனவே அறிவித்தப்படி நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு விதான சவுதாவில் முதல் மாடியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

லட்சுமண் சவதி ெவற்றி

இந்த தேர்தலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியின் வேட்பாளர் லட்சுமண் சவதிக்கு வாக்களித்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஓட்டுப்பதிவை புறக்கணித்துவிட்டன. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 120 ஓட்டுகள் பதிவாயின. மாலையில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் லட்சுமண் சவதி 113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவர் எம்.எல்.சி.யாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் 7 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதாவுக்கு ஓட்டு

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி நகர் தொகுதி ஜி.டி.தேவே கவுடா, பா.ஜனதாவுக்கு வாக்களித்ததாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story