தாளவாடி அருகே, ரோட்டில் நடமாடிய புலி - வாகன ஓட்டிகள் பீதி


தாளவாடி அருகே, ரோட்டில் நடமாடிய புலி - வாகன ஓட்டிகள் பீதி
x
தினத்தந்தி 18 Feb 2020 3:45 AM IST (Updated: 18 Feb 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே ரோட்டில் புலி நடமாடியது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

தாளவாடி, 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் குறிப்பாக சிறுத்தை, புலி, யானை போன்றவை வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. கால்நடைகளையும் வேட்டையாடுகின்றன.

மேலும் இந்த வனவிலங்குகள் தினமும் வனச்சாலையில் நடமாடி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலமலையை சேர்ந்த 3 பேர் காரில் நெய்தாளபுரம் என்ற இடத்தில் சென்றபோது ரோட்டில் சிறுத்தை நடந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த பரபரப்பு இன்னும் அடங்குவதற்குள் நேற்று முன்தினம் இரவு வனச்சாலையில் புலி நடந்து சென்றதை வாகன ஓட்டிகள் நேரில் பார்த்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நெய்தாளபுரம் நோக்கி காரில் நேற்று முன்தினம் இரவு 4 பேர் சென்று கொண்டிருந்தனர். சிக்கள்ளி அருகே சென்றபோது புலி ஒன்று ரோட்டில் ஒருபுறம் இருந்து மறுபுறம் நடந்து சென்றதை பார்த்தனர்.

இதனால் தங்கள் வாகனத்தை சற்று தூரத்திேலயே நிறுத்திக்கொண்டனர். தங்கள் செல்போனில் புலியை படம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். வனச்சாலையில் சிறுத்தையை தொடர்ந்து புலியும் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். 

Next Story