ரூ.4,050 கோடியில் 21 நீர்ப்பாசன திட்டங்கள் போலீஸ் துறையில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கவர்னர் உரையில் அறிவிப்பு


ரூ.4,050 கோடியில் 21 நீர்ப்பாசன திட்டங்கள்   போலீஸ் துறையில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கவர்னர் உரையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 5:13 AM IST (Updated: 18 Feb 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

ரூ.4,050 கோடியில் 21 நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், 3 மாவட்டங்களில் சூரிய சக்திமின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படுவதாகவும், போலீஸ் துறையில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் கவர்னர் வஜூபாய்வாலா தனது உரையில் அறிவித்தார்.

பெங்களூரு, 

நடப்பாண்டின் கர்நாடக சட்டசபையின் கூட்டு, அதாவது முதல் கூட்டத் ெதாடர் 17-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கவர்னர் உரை

அதன்படி சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று கூடியது. சட்டசபையில் உரையாற்ற கவர்னர் வஜூபாய் வாலா காலை 11 மணிக்கு சட்டசபைக்கு வந்தார்.

அவரை விதான சவுதா கட்டிடத்தின் நுழைவு வாயிலில் முதல்-மந்திரி எடியூரப்பா, மேல்-சபை தலைவர் பிரதாப் சந்திரஷெட்டி, சபாநாயகர் காகேரி, சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர் காலை 11.05 மணிக்கு தனது உரையை பேச ஆரம்பித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கால்நடை மருத்துவ மையங்கள்

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சம் வரையும், தேசிய வங்கிகளில் ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. பட்டு உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. வெளிப்படைத்தன்மையை கொண்டுவர பட்டுக்கூடு சந்தைகளில் மின்னணு முறையில் ஏலம் விடும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு மின்னணு முறையில் பணம் வழங்கப்படுகிறது.

நாட்டிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு மாநில அரசு ரூ.5 ஊக்கத்தொகை வழங்குகிறது. இதன் மூலம் 9 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். மாநிலத்தில் 15 மாவட்டங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடல்சார் மீன் உற்பத்தியில் கர்நாடகம் 6-வது இடத்திலும், பொது மீன் உற்பத்தியில் 9-வது இடத்திலும் உள்ளது. இது நல்ல வருமானம் கிடைக்கும் தொழிலாகவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அதனால் மீனவளத்துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த அரசு முழு கவனம் செலுத்தும்.

பாசன வசதி

வனப்பரப்பை அதிகப் படுத்துவதில் கர்நாடகம் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் 2.83 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டதின் காரணமாக 41 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களை எனது அரசு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது.

நடப்பு நிதியாண்டில் சுமார் 12 ஆயிரம் எக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரியான முறையில் தண்ணீரை பயன்படுத்தும் நோக்கத்தில் விஜயநகர் கால்வாயை நவீனப்படுத்த ரூ.450 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மல்லபிரபா கால்வாயை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.1,000 கோடியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாக ஒப்புதல்

ஹேமாவதி கால்வாயை ரூ.475 கோடியில் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு நவீனப் படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் ரூ.500 கோடி செலவில் 96 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாயை மேம்படுத்தும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 166 கிலோ மீட்டர் தூரத்தி்ற்கு ஹேமாவதி கால்வாய் நவீனப்படுத்தப்படுகிறது. ரூ.4,050 கோடியில் 21 நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சூரியசக்தி மின் உற்பத்தி பூங்கா

புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் கர்நாடகம் பெருமை கொள்ளும் வகையில் செயல்படுகிறது. பாவ கடாவில் உள்ள சூரியசக்தி மின்சார உற்பத்தி பூங்கா, முழுவதுமாக செயல்பட தொடங்கியுள்ளது.

அதே போல் தலா 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் கொப்பல், பீதர், கதக் ஆகிய மாவட்டங்களில் சூரியசக்தி மின்சார உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். விவசாயத்திற்கு சூரியசக்தி பம்பு செட்டுகளை பயன்படுத்தும் வகையில் ஒரு கொள்கையை வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

காவிரி குடிநீர் திட்டம்

நகர வளர்ச்சி அரசின் முன்னுரிமை துறைகளில் மிக முக்கியமானது. முதல்-மந்திரி நவ நகரோத்தனா திட்டத்தின் கீழ் ரூ.8,344 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2,500 கோடிக்கு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் 5-வது கட்ட காவிரி குடிநீர் திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு இதன் மூலம் பெங்களூருவுக்கு கூடுதலாக தினமும் 775 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். பாஸ்போர்ட்டை பரிசீலிக்க பெங்களூரு போலீசார் ஒரு செல்போன் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த வசதி மாநிலம் முழுவதும் 812 போலீஸ் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவில் 8 புதிதாக சைபர் குற்ற பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூருவுக்கு என்று தனியாக பயங்கரவாத தடுப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அவசரகாலங்களில் நகரவாசிகளுக்கு உதவ அவசரகால பதிலடி உதவி படை உருவாக்கப்பட்டுள்ளது. கொடூரமான குற்றவாளிகள், பயங்கரவாதிகளை அடைக்க பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் உயர் பாதுகாப்பு ஜெயில் அமைக்கப்பட்டு வருகிறது. விஜயாப்புரா, பீதரிலும் மத்திய சிறைச்சாலை அமைக்கப்படுகிறது.

பெண்களுக்கு 25 சதவீதம்

போலீஸ் துறை பணி நியமனங்களில் பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஓராண்டில் இதுவரை தீ விபத்து குறித்து 60 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பு சொத்துகளில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை தீயணைப்பு படையினர் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றியுள்ளனர். 4-வது கட்ட மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக 3,692 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.

ஐதராபாத்-கர்நாடக பகுதி மேம்பாட்டு வாரியம், கல்யாண-கர்நாடக மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வாரியத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.936 கோடி நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.1,000 கோடி வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது. ஆராய்ச்சி, புதுமையை உருவாக்குதல் மற்றும் திறமையான பணியாளர்கள் பெங்களூருவில் இருக்கிறார்கள் என்பது உலகமே அறியும். 2-ம் நிலை நகரங்களும், மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த சபையில் தரமான விவாதங்கள் நடைபெற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவாதம் மூலம் புதிய ஆலோசனைகள், கருத்துகள் வரட்டும்.

இவ்வாறு வஜூபாய் வாலா பேசினார்.

30 நிமிடங்கள் வாசித்தார்

20 பக்கங்கள் கொண்ட உரை புத்தகத்தை 30 நிமிடங்களில் வாசித்து முடித்தார். அதைத்தொடர்ந்து அவர் சபை உறுப்பினர்களிடம் இருகரம் கூப்பி அங்கிருந்து விடைபெற்று சென்றார். அவருக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று விடை கொடுத்தனர். கவர்னர் இந்தி மொழியில் உரையாற்றினார். அவரது உரை கன்னடம், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் சபை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

Next Story