விளை நிலத்தில் சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு - கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கிராம மக்கள் மனு
விளை நிலத்தில் சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அப்போது கடந்த முறை நடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.
வத்தலக்குண்டு ஒன்றியம் எழுவனம்பட்டி ஊராட்சி வி.உச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாங்கள் விவசாயத்தையே நம்பியுள்ளோம். இந்த நிலையில் எங்கள் ஊரின் கிழக்கு பகுதியில் உள்ள விளைநிலத்தில் சோலார் பேனல் அமைக்க ஒரு தனியார் நிறுவனம் முயன்று வருகிறது. அவ்வாறு சோலார் பேனல் அமைக்கப்பட்டால் நிலம் அதிகப்படியான வெப்பத்தை தாங்க நேரிடும். அதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போகும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே விவசாய நிலத்தில் சோலார் பேனல் வைக்க மாவட்ட கலெக்டர் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.
நிலக்கோட்டை தாலுகா பொம்மணம்பட்டி, பாலம்பட்டி, ஒருத்தட்டு, சி.புதூர், ஜெகநாதபுரம் ஆகிய ஊர் பொதுமக்கள் சார்பில் பொம்மணம்பட்டியை சேர்ந்த சங்கர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், பொம்மணம்பட்டிக்கும், பாலம்பட்டிக்கும் இடையே உள்ள மோட்டாங்கரடு பகுதியில் சிலர் இரவு பகலாக பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி லாரிகளில் கொண்டு செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த ஏராளமான மரங்களையும் வெட்டி அழித்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அனுமதியின்றி மண் அள்ளுபவர்கள் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
வனவேங்கைகள் கட்சியின் மாநில தலைவர் இரணியன் கொடுத்த மனுவில், முருகப்பெருமானை திருமணம் செய்த வள்ளி, எங்கள் குலத்தை சேர்ந்தவர். பழனி முருகன் கோவிலில் முருகப்பெருமானுடன் அருள்பாலிக்கும் வள்ளிக்கு தாய்வழி சீதனமாக தேன், தினைமாவு, மா, பலா, வாழை ஆகியவற்றை கொடுப்பதற்கும், சிறப்பு வழிபாடு நடத்துவதற்கும் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் போது தமிழில் பூஜைகள், வழிபாடுகள் நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
ஒட்டன்சத்திரம் தாலுகா ஐ.வாடிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 375 மனுக்கள் நேற்று கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, தனிதாசில்தார் சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story