மதுரையில் முஸ்லிம்கள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு


மதுரையில் முஸ்லிம்கள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 4:30 AM IST (Updated: 18 Feb 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரை மகபூப்பாளையத்தில் முஸ்லிம்கள் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

மதுரை, 

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து மதுரையில் கடந்த 14-ந்தேதி இரவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் மதுரை மகபூப்பாளையம் பகுதியிலும் போராட்டம் நடந்தது. அங்கு அன்று தொடங்கிய தொடர் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒரு சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அங்கு மதுரை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், சமரசம் எதுவும் ஏற்படவில்லை. இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் முஸ்லிம்களின் போராட்டத்தை கண்காணிக்க ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங்கை தமிழக அரசு நியமித்து உள்ளது. அவர் மதுரையில் முகாமிட்டுள்ளார்.

போராட்டம் குறித்து அவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, போராட்ட குழுவினருடன் அபய்குமார் சிங் நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று அங்கு வரவில்லை.

இதற்கிடையே மதுரை நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசலில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. இதனை மதுரை எம்.பி. வெங்கடேசன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மோடியும், அமித்ஷாவும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள், பழங்குடியின மக்களை நாடற்றவர்களாக மாற்றுவதற்காக பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட ஆபத்தான சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவளிக்க கூடாது. எடப்பாடி பழனிசாமியின் அரசோ முஸ்லிம்கள் மீது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தேசிய குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை கொண்டுவந்து நாட்டின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த மோடி, அமித்ஷா மீதுதான் வழக்குப்போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அங்கு இன்றும் (செவ்வாய்க்கிழமை) தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

Next Story