வெவ்வேறு சம்பவம்: 171 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண்கள் உள்பட 8 பேர் கைது - கார்,ஆட்டோ, இருசக்கர வாகனமும் சிக்கின


வெவ்வேறு சம்பவம்: 171 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண்கள் உள்பட 8 பேர் கைது - கார்,ஆட்டோ, இருசக்கர வாகனமும் சிக்கின
x
தினத்தந்தி 18 Feb 2020 4:15 AM IST (Updated: 18 Feb 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 171 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கார் மற்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் உசிலம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அயோத்திப்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மனைவி ராஜகொடி(வயது52), உசிலம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் மனைவி தமிழ்ச்செல்வி(30) ஆகிய 2 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் செக்கானூரணியில் போலீசார் இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த செல்வம்(40) என்பவர் 27 கிலோ கஞ்சாவுடன் வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர்.

திருமங்கலம் அருகே சிந்துபட்டி கிராமத்தில் சிவராமன் என்பவரது வீட்டில் கஞ்சா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு கஞ்சா கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக சிந்துபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல்ராஜா மற்றும் போலீசார் அங்கு இருந்த 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கொண்டு செல்ல பயன்படுத்திய ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனையில் தொடர்புடைய வெள்ளிமலைப்பட்டியை சேர்ந்த ஆனந்த்(32), முருகன்(30), பாக்கியராஜ்(30), காசிமாயன்(30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய தும்மக்குண்டு மகாராஜன் மற்றும் வெள்ளிமலைப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சேடபட்டி போலீசார் சின்னக்கட்டளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமர் (75) என்பவர் விற்பனை செய்வதற்கு 3 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்த ரூ.3090-யும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து ராமரை கைது செய்தனர்.

Next Story