நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்
நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
தென்காசி,
நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
நலவாரியம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நரிக்குறவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் புரிவதற்கான உதவி அளிக்கவும், அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் தமிழக அரசால் நரிக்குறவர் நலவாரியம் இயங்கி வருகிறது.
18 வயது நிறைவு செய்து 60 வயதுக்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழில் மற்றும் விவசாய கூலி தொழிலில் ஈடுபட்டுள்ள நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் இந்த நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
நலத்திட்ட உதவிகள்
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் உதவி தொகை, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உதவி தொகை, இயற்கை மரணத்திற்கு ரூ.15 ஆயிரம் உதவி தொகை, ஈமச்சடங்கிற்கான உதவி தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்கு உதவி தொகை ரூ.500, 6 முதல் 9–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு ரூ.1000, 10–ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ.1000, 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000, 11–ம் வகுப்பு படிப்பு வரும் பெண் குழந்தைக்கு ரூ.1000, 12–ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ.1,500, 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500, முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1,500, மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1,750, முறையான பட்டமேற்படிப்புக்கு ரூ.4,000, மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டமேற்படிப்புக்கு ரூ.5,000, தொழிற்கல்வி பட்டபடிப்புக்கு ரூ.4 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டமேற்படிப்புக்கு ரூ.6,000, தொழிற்கல்வி பட்டமேற்படிப்புக்கு ரூ.6 ஆயிரம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.8 ஆயிரம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ரூ.1000, மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ரூ.1,200, திருமண உதவி தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மகப்பேறு உதவி தொகை
மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 6 மாதங்களுக்கும், கருச்சிதைவு, கருக்கலைப்புக்கு ரூ.3 ஆயிரம், மூக்கு கண்ணாடி செலவு தொகையை ஈடு செய்தலுக்கு ரூ.500, முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1000, தனி நபர் தொழில் தொடங்க முழு மானியம் ரூ.7,500, குழுவாக தொழில் தொடங்குவதற்கு தனிநபருக்கு ரூ.10 ஆயிரம், அதிகபட்சமாக குழுவுக்கு ரூ.1,25,000 வழங்கப்படுகிறது.
இதுவரை நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை பெறவும், தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story