தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் போட்டியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு இடையேயான விழுப்புரம் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இன்று (அதாவது நேற்று) முதல் நாளை (வியாழக்கிழமை) வரை நடத்தப்பட்டு வருகிறது.
இப்போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 14 தொழிற்பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 580 வீரர்- வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். ஆண்களுக்கு இன்று (அதாவது நேற்று) மற்றும் நாளை (அதாவது இன்று) ஆகிய நாட்களில் கையுந்து பந்து, கால்பந்து, பூப்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு 20-ந் தேதி (வியாழக்கிழமை) தடகளம், வளைபந்து, கையுந்துபந்து, பூப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ரத்னா பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும், இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அனைவரும் விளையாட்டில் சிறந்து விளங்கி வெற்றி பெற்று, பரிசு பெற வாழ்த்துகள் என்றார்.
இதில் மண்டல பயிற்சி இணை இயக்குனர் (விழுப்புரம்) ஜான்போஸ்கோ, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமார் ராஜா, உடற்பயிற்சி அலுவலர் சங்கர் மற்றும் பயிற்றுனர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story