10 ஆண்டு போராட்டத்திற்கு விடிவு: ஆண்டிப்பட்டாக்காடு- கோவிலூர் வரை பஸ் வசதி


10 ஆண்டு போராட்டத்திற்கு விடிவு: ஆண்டிப்பட்டாக்காடு- கோவிலூர் வரை பஸ் வசதி
x
தினத்தந்தி 18 Feb 2020 10:00 PM GMT (Updated: 18 Feb 2020 2:17 PM GMT)

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சியை சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு பஸ் வசதி வேண்டுமென கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வந்தனர்.

கீழப்பழுவூர், 

தஞ்சாவூரிலிருந்து ஏலாக்குறிச்சி வரை வரும் பஸ்சினை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்தி சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கும் அந்த பஸ் வந்து செல்ல அப்பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் தொடர் போராட்டம் மற்றும் தொடர் கோரிக்கையை ஏற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக தஞ்சை கோட்ட மேலாளர் ஆகியோரின் ஒப்புதலோடு காலை, மாலை என இரண்டு வேைளக்கும் அந்த பஸ் 10 கிராமங்களுக்கும் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் இயக்கப்படுவதனால் கோவிலூர், ஆண்டிப்பட்டாக்காடு, சிலுப்பனூர், புத்தூர், வல்லகுளம், சுண்டகுடி, ஆலந்துறையார்கட்டளை, ஓட்டக்கோவில், சின்னப்பட்டாக்காடு, பெரியப்பட்டாக்காடு பகுதி மக்கள் பயன் அடைவார்கள். இதனை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து புதிதாக கிராமத்திற்கு வந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு சால்வை அணிவித்து வரவேற்று இந்த வசதியை ஏற்படுத்தித்தந்த அனைத்து அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதில் சமூக ஆர்வலர் பாலகிரு‌‌ஷ்ணன் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் இயங்கும் பஸ்சை வரவேற்றனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்களது கிராமத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் 15-க்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்துடன் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கல்லூரிக்கு சென்று படித்து வந்தனர். இனி அவர்கள் சிரமமின்றி சென்று வருவார்கள். மேலும் கூலித்தொழிலாளர்கள் பலரும் வேலைக்கு சென்று வர இந்த பஸ் வசதியாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Next Story