செல்பி மோகத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று வழிதவறிய வாலிபர் 24 மணி நேரத்தில் பொதுமக்கள் மீட்டனர்
செல்பி மோகத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று வழிதவறிய வாலிபரை, 24 மணி நேரத்தில் பொதுமக்கள் மீட்டனர்.
செங்கோட்டை,
செல்பி மோகத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று வழிதவறிய வாலிபரை, 24 மணி நேரத்தில் பொதுமக்கள் மீட்டனர்.
அடர்ந்த வனப்பகுதி
தமிழக– கேரள எல்லையான செங்கோட்டை புளியரை பாதையையொட்டி பெரும்பகுதி அடர்ந்த வனங்கள் நிரம்பிய மலைப்பாதையாகும். இந்த மலைகள் அனைத்தும் கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் அமைந்திருக்கும். இங்கு மான், மிளா, காட்டு எருமை, யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கேரள எல்லையான ஆரியங்காவு பகுதியில் ரோஸ் மலை என்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு வனத்தின் அழகை கண்டுகளிக்க உயர் கோபுரம் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுமேஷ் (வயது 23), அவருடைய நண்பர் அஜேஷ் (22) ஆகிய இருவரும் இப்பகுதியை சுற்றிப் பார்க்க நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வந்துள்ளனர்.
செல்பி மோகம்
அவர்கள் இருவரும் செல்பி மோகத்தால் சற்று தூரம் உள்ளே சென்றுள்ளனர். அங்கு செல்போனில் செல்பி எடுக்க முயன்றபோது வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஏதே ஒரு வனவிலங்கு அவர்களை தாக்க வருவதை கண்டனர். இதையடுத்து இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வெவ்வேறு திசைக்கு தப்பி ஓடினார்கள். பல மணி நேரம் கழித்து நீண்ட போராட்டத்துக்கு பின் அஜேஸ் அதே இடத்துக்கு வந்து சேர்ந்தார். அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ளே சென்றதால் செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து சுமேஷ் மரத்தின் மேல் ஏறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வனத்துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியோடு தீவிரமாக சுமேசை தேடினர். நள்ளிரவு வரை தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர்.
பொதுமக்கள் மீட்டனர்
நேற்று காலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களான பினு, பினிஷ், மனேஸ், விஷ்ணு சைசூ ஆகியோர் மீண்டும் தீவிரமாக வனப்பகுதிக்கு சென்று தேடினர். அங்கு மயங்கிய நிலையில் கீழே விழுந்து காயத்துடன் தள்ளாடி வந்த சுமேசை மீட்டு தென்மலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பெற்றோருக்கு தகவல் அளித்து சுமேசை ஒப்படைத்தனர். மோட்டார்சைக்கிளையும் மீட்டனர். சுமேசை வனப்பகுதியில் இருந்து காப்பாற்றி அழைத்து வந்த அவர்களை பெற்றோர்களும், உறவினர்களும் பாராட்டினர்.
செல்பி மோகத்தால் சிக்கிய 2 வாலிபர்களும் வனவிலங்குகளிடம் இருந்து உயிர் பிழைத்து வந்துள்ளனர். இது மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும்.
Related Tags :
Next Story