பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 18 Feb 2020 10:00 PM GMT (Updated: 18 Feb 2020 2:45 PM GMT)

தென்னை, பாக்கு மரங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் தாக்குதல் சமீப காலங்களில் கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் காணப்படுகிறது. வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20 அல்லது 30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மற்றும் பாக்கு மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வெள்ளை ஈக்களானது, தென்னை மற்றும் பாக்கு மரங்களைத்தவிர, வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைந்து, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையானது பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வெள்ளை ஈக்கள் மேலாண்மை முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (நீளம் 5 அடி அகலம் 1½ அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 5 அல்லது 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை மற்றும் பாக்கு தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மற்றும் பாக்கு மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.

அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிரி பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும். எனவே தென்னை விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story