அடிக்கடி விபத்தை சந்திக்கும் பிரிவு சாலை
குளித்தலை அருகே அடிக்கடி விபத்தை சந்திக்கும் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை,
திருச்சியில் இருந்து கரூர் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் குளித்தலை நகரப்பகுதிக்கோ அல்லது நகரப்பகுதி வழியாக முசிறி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிக்கோ செல்ல திருச்சி - கரூர் புறவழி தேசியநெடுஞ்சாலையில் உள்ள மருதூர் பிரிவு சாலையை பயன்படுத்துகின்றனர்.
அதேபோல கரூர் பகுதியில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் புறவழி தேசியநெடுஞ்சாலையில் இருந்து குளித்தலை அருகே உள்ள மேலக் குறப்பாளையம் பிரிவு சாலையில் திரும்பி குளித்தலை பகுதி வழியாக வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் திருச்சி - கரூர் புறவழி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேலக் குறப்பாளையம் பிரிவு சாலை வழியாக குளித்தலை நகரப் பகுதி நோக்கி செல்லும் வாகனங்களும், கரூர் நோக்கி செல்லும் வாகனங்களும் அதிவேகமாக இச்சாலையை கடக்கும்போது இந்த பிரிவு சாலை அமைந்துள்ள இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்தை தடுக்கவும், வாகனங்களின் வேகத்தை குறைக்கவும் இச்சாலையின் இருபுறமும் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர். இருப்பினும் இந்த பிரிவு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்தவண்ணமே உள்ளன. இதனால் பலரது வாகனங்கள் சேதமடைந்ததுடன் பலர் காயமடைந்தும், பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இச்சாலையில் கடந்த 14 -ந் தேதி அரசு பஸ் மீது லாரி மோதியதில் சிலர் காயம் அடைந்தனர். மேலும் அதேசாலையில் இரவு பொதுப் பணித்துறை அதிகாரி சென்ற ஜீப்மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது. இந்த பிரிவு சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்க, கரூர் பகுதியில் இருந்து குளித்தலை பகுதிக்கு வரும் வாகனங்கள் திரும்பும் பகுதியில், 2 சாலைகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் உரிய ஆய்வு செய்து அங்கு வேகத்தடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story