குருவிகுளம் யூனியனில் நீடிக்க வலியுறுத்தி மலையான்குளம் பகுதி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மலையான்குளம் பகுதி கிராமங்கள் குருவிகுளம் யூனியனிலேயே நீடிக்க வலியுறுத்தி நேற்று அந்த கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவேங்கடம்,
மலையான்குளம் பகுதி கிராமங்கள் குருவிகுளம் யூனியனிலேயே நீடிக்க வலியுறுத்தி நேற்று அந்த கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மலையான்குளம் பகுதி மக்கள்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட குருவிகுளம் யூனியனில் அடங்கிய மலையான்குளம் பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களான மலையான்குளம், ஜே.டி.நகர், பாத்திமா நகர், யேசுநாதபுரம் உள்ளடக்கிய கிராமங்களை நெல்லை மாவட்டம் மேலநீலிதநல்லூர் யூனியனோடு இணைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தாலுகா அலுவலகத்தை முற்றுகை
மலையான்குளம் பகுதி கிராம மக்கள் 8 கி.மீ. தொலைவிலுள்ள குருவிகுளம் யூனியனுக்கு எளிதாக சென்று விடலாம் என்றும், மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு செல்ல 23 கி.மீ. சுற்றி செல்ல வேண்டும் என்றும், அதற்கு போதிய போக்குவரத்து வசதியும் இல்லை, சங்கரன்கோவில் சென்று வெறொரு பஸ் மாறி சென்றாலும், மேலும் 2கி.மீ. நடந்து சென்று மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். எனவே இந்த கிராமங்கள் குருவிகுளம் யூனியனிலேயே தொடர வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதில் தி.மு.க. கிளை செயலாளர் கருத்தப்பாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துப்பாண்டி, விவசாய சங்க பிரதிநிதிகள் பூச்சியப்பன், ரமேஷ், போத்திராஜ், போத்திக்குமார், சந்தனம், செந்தில்குமார், வக்கீல் கண்ணன் மற்றும் 300–க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பங்கேற்றனர். தங்களது கிராமங்கள் குருவிகுளம் யூனியனிலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், அனைவரும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ரேசன்கார்டு, ஆதார் கார்டு, வேலைஉறுதி திட்ட அட்டை ஆகியவற்றை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க முயன்றனர். அவர்களுடன் திருவேங்கடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாசில்தார் உறுதி
இதை தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தாலுகா அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தாசில்தார் பாலசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். கோரிக்கையை வலியுறுத்தி அனைவருடைய ரேசன்கார்டு, ஆதார் கார்டு, வேலைஉறுதி திட்ட அட்டை போன்றவற்றை தாசில்தாரிடம் அவர்கள் கொடுக்க முயன்றனர். அவற்றை தாசில்தார் வாங்க மறுத்து விட்டார். கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார்.
இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற பிரமுகர்கள் கூறுகையில்,‘ கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நாளை(வியாழக்கிழமை) கோவில்பட்டி–சங்கரன்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக, தெரிவித்தனர்.
Related Tags :
Next Story