வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டதை கண்டித்து, தமிழ் மாநில வருவாய் த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நேற்று முன்தினம் இரவும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டம் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேலு தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கலெக்டர் தங்களை அழைத்து பேச வேண்டும். மாவட்ட வருவாய் அதிகாரி ஏற்கனவே தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் இரவு பகலாக காத்திருந்தும் இதுவரையில் தங்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. மாநில வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்ட ஆணையை உடனடியாக கலெக்டர் நிறைவேற்ற வேண்டும். தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நியாயமான கோரிக்கை இது. நீதிமன்றத்திற்கு முரணாக கலெக்டர், 36 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளார்.
இதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் 36 துணை தாசில்தார்கள் பதவி உயர்வை ரத்து செய்ய கோரியும், இதுநாள்வரை ரத்து செய்யவில்லை. உடனடியாக எங்களது கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்ட அளவில் உள்ள இந்த போராட்டம் மாநில அளவில் விரிவுபடுத்தப்படும். மேலும் இந்த கோரிக்கைக்கு முடிவு எட்டாவிட்டால் வருகிற 25-ந் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, 36 துணை தாசில்தார்கள் பதவி உயர்வை ரத்து செய்ய உத்தரவிட்டும் இதுநாள்வரை ரத்து செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story