பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் அமர்நாத் பனி லிங்க தரிசனம் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது


பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில்   அமர்நாத் பனி லிங்க தரிசனம்   24-ந் தேதி வரை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 19 Feb 2020 4:30 AM IST (Updated: 18 Feb 2020 11:51 PM IST)
t-max-icont-min-icon

பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் அமர்நாத் பனி லிங்க தரிசன நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 24-ந் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

சென்னை, 

சென்னையில் ஐ.சி.எப். பேருந்து நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாதுகாப்புப்படை(ஆர்.பி.எப்.) அணிவகுப்பு மைதானத்தில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கோகுல இந்திரா, அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகன்(தி.மு.க.), நடிகர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் பொன்னையன் அமர்நாத் பனிலிங்க குகையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமர்நாத் பனி லிங்கம்

காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்கம் போன்று மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை தரிசித்தவர்கள் அமர்நாத்திற்கே சென்று வந்ததை போன்ற உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் குஜராத் மாநிலத்தின் பிரபாஸ் நகரில் உள்ள சோம்நாத் லிங்கம், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் லிங்கம், மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஸ்வர் லிங்கம், மத்தியபிரதேசம் ஓங்காரேஸ்வரர் லிங்கம், மராட்டிய மாநிலங்களில் உள்ள வைத்தியநாதேஸ்வரர் லிங்கம், பீமா ஷங்கர் லிங்கம், திரியம்பகேஸ்வரர் லிங்கம், கிரிஷ்ணேஸ்வர் லிங்கம், தமிழகத்தின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி லிங்கம், குஜராத் மாநிலம் நாகேஸ்வரர் லிங்கம், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் லிங்கம், உத்திரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் மந்தாகினி நதி உற்பத்தியாகும் இடத்தில் அமைந்துள்ள கேதார்நாத் லிங்கம் ஆகிய 12 ஜோதிர் லிங்கங்களும் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தண்ணீர் தேவை உணர்த்தும் அரங்கம்

மேலும் ஆன்மாவின் பயணம் குறித்த புகைப்பட காட்சி அரங்கங்கள், அபிஷேக லிங்க தரிசன ஒலி-ஒளி காட்சி அரங்கம், தியான பயிற்சி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.

போதை பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனை வழங்கும் அரங்கம், ஆன்மிகத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பை ஆதாரங்களுடன் விளக்கும் அரங்கம், தண்ணீரின் இன்றியமையாமை, சேமிப்பு மற்றும் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றை விளக்கும் அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இலவசமாக தரிசிக்கலாம்

இதுகுறித்து பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தமிழ்நாடு மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா கூறியதாவது:-

ஜோதிர்லிங்க தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ள 13 லிங்கங்களையும் நேரில் சென்று தரிசிக்க விரும்பினால் பல மாத காலமும் பல லட்ச ரூபாய் செலவும் ஏற்படும்.

இவற்றை தவிர்ப்பது மட்டுமின்றி அனைத்து வயதினரும் இந்த அனைத்து ஆன்மிக தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பை இந்த தத்ரூப தரிசனம் ஏற்படுத்தி தருகிறது. வருகிற 24-ந் தேதி வரை இந்த தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் இலவசமாக ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதிகள்

நேற்று ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வள்ளிநாயகம், பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பனி லிங்கத்தை தரிசித்து சென்றனர்.

Next Story