“செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசினேன்” கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்
“செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசினேன்” என்று கைதான தாய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில், தொட்டமன்துறை எனும் இடத்தில் முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதியில் ஆற்றுக்குள் கிடந்த மூட்டையை போலீசார் கைப்பற்றினர். அதற்குள் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு ஆண் உடல் மட்டும் இருந்தது. அதை கைப்பற்றி, இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்கு வாசல் தெருவை சேர்ந்த ராஜா மனைவி செல்வி (வயது 49), அவருடைய இளையமகன் விஜய்பாரத் (25) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சாக்குமூட்டையுடன் அந்த வழியாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதன்பேரில் செல்வி, விஜய்பாரத் இருவரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இறந்தது செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் (30) என்பதும், அவரை அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது.
கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து விக்னேஷ்வரனின் தாய் செல்வி, தம்பி விஜய்பாரத் ஆகிய 2 பேரையும் கம்பம் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
பெற்ற மகனை இப்படி கொடூரமாக கொலை செய்ய என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார். வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
எனது கணவர் ராஜா. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். என்னுடைய மகன்கள் இருவரும் என்ஜினீயர்கள். இருவரும் கோவையில் தங்கி தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். மூத்த மகன் விக்னேஷ்வரனுக்கு திருமணம் ஆகாத நிலையில், இளையமகன் விஜய்பாரத், லதா என்ற பெண்ணை காதலித்தார். அவர்களுக்கு கடந்த 7-ந்தேதி உத்தமபாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக கோவையில் இருந்து விக்னேஷ்வரன் வந்து இருந்தார். தம்பிக்கு திருமணம் முடிந்த நிலையில், விக்னேஷ்வரன் தனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி வந்தான். அவனுக்கு பெண் பார்க்க முடிவு செய்து இருந்தோம். ஆனால், அவனுக்கு மது, கஞ்சா பழக்கம் இருந்தது. அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தான். திருமணமான சில நாட்களில் இளையமகன் விஜய்பாரத் தனது மனைவியை போடி சில்லமரத்துப்பட்டியில் உள்ள எனது தாய் வீட்டில் விட்டுவிட்டு, கோவைக்கு வேலைக்கு சென்று விட்டான்.
இந்நிலையில், விக்னேஷ்வரன் போதையில் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியதோடு, ‘தம்பி மட்டும் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான். நான் மட்டும் தனியாக இருப்பதா?’ என்று தகராறு செய்து வந்தான். பின்னர் எல்லைமீறி தாய் என்றும் பாராமல் என்னிடம் செக்ஸ் தொந்தரவு செய்தான்.
இதை நான் இளையமகனிடம் கூறினேன். இனிமேலும் இவனை உயிரோடு விட்டால் அவமானமாகிவிடும் என்று, அவனை கொலை செய்ய முடிவு செய்தோம். இதற்காக இளையமகனை ஊருக்கு வரச் சொன்னேன். அவனும் கோவையில் இருந்து புறப்பட்டு வந்தான். கடந்த 16-ந் தேதி காலையில் விக்னேஷ்வரனுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அதை குடித்துவிட்டு அவன் மயங்கி விட்டான். பின்னர், அவன் வாய், மூக்கில் கையை வைத்து அமுக்கி மூச்சை நிறுத்தினேன். இதில் அவன் இறந்து விட்டான்.
பின்னர், இளையமகன் வீட்டுக்கு வந்தான். உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த நினைத்தோம். இதற்காக ஆடு அறுக்கும் கத்தி மற்றும் ஒரு பலகையை எடுத்து வந்து தலை, கை, கால்களை தனித்தனியாக வெட்டினோம். இடுப்புக்கு கீழ் கால்களை சேர்த்து வெட்டும் போது குடலும் வெளியே வந்து விட்டது. இதையடுத்து தலையை தனியாகவும், கை, கால்கள், குடல் ஆகியவற்றை தனியாகவும், உடலை தனியாகவும் சாக்கு மூட்டைகளில் கட்டினோம்.
முதலில் உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்று முல்லைப்பெரியாற்றில் வீசினோம். பின்னர், தலையை கிணற்றில் வீசினோம். அதன்பிறகு கை, கால்கள், குடல் ஆகியவற்றை மற்றொரு கிணற்றில் வீசினோம். இவை வெளியே வராமல் இருக்க குழவிக்கல்லை கை, கால்களுடன் சாக்கு மூட்டையில் போட்டு வீசினோம்.
உடலை வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்தி, பலகையை கம்பம் ஊமையன் வாய்க்காலில் வீசிவிட்டோம். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவனுடைய செருப்பையும் வெளியே வீசி விட்டோம். வீட்டில் படிந்து இருந்த ரத்தக்கறையை இரவோடு இரவாக கழுவி சுத்தம் செய்து விட்டோம். யாருக்கும் தெரியாது என்று நினைத்தோம். ஆனால், போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story