தரைப்பாலத்தை தோண்டி மணல் அள்ளியதால் குடகனாறு அணைக்கு செல்லும் பாதை துண்டிப்பு
வேடசந்தூர் அருகே தரைப்பாலத்தை தோண்டி எடுத்து மர்மநபர்கள் மணலை அள்ளி சென்றதால் குடகனாறு அணைக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடகனாறு அணை உள்ளது. கல்வார்பட்டி, விருதலைப்பட்டி, கூவக்காப்பட்டி, புதுக்கோட்டை, பூதிப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் அணை வறண்டு போய் உள்ளது.
இதை பயன்படுத்தி மர்மநபர்கள் அணைப்பகுதியில் இரவு நேரத்தில் டிராக்டர், லாரிகளில் மணலை அள்ளி செல்கின்றனர். மேலும் அணைக்கு தண்ணீர் வரும் குடகனாற்றிலும் மர்மநபர்கள் மணலை அள்ளி சென்றுள்ளனர். இதனால் அணைப்பகுதியில் ராட்சத பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதுதவிர வேடசந்தூரில் இருந்து அடைக்கனூர், நாககோனானூர் வழியாக அழகாபுரி குடகனாறு அணைக்குள் செல்லும் தார் சாலையில் உள்ள தரைப்பாலத்தையும் மர்மநபர்கள் விட்டு வைக்கவில்லை. தரைப்பாலத்தை தோண்டி எடுத்து மணலை அள்ளி சென்றுள்ளனர். இதனால் அணைக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் தட்டிக்கேட்டால் மணல் அள்ளும் கும்பல் மிரட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மணல் அள்ளுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மணல் அள்ளப்படுவதால் சுற்றியுள்ள கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே குடகனாறு அணையில் மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story