பூண்டி ஏரியில் குளிப்பதை தடுக்க இரும்பு வேலிகள்
பூண்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. உயிர் பலிகளை தடுக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செங்குன்றம்,
சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆங்கிலேயர்கள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூண்டியில் நீர் தேக்கம் அமைத்தனர். 1939-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டன. அப்போது செலவிடப்பட்ட தொகை ரூ.65 லட்சம் என்பது குறிப்பிடதக்கது. அப்போதைய சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி, நீர்தேக்கம் அமைக்க சீரிய முயற்சி மேற்கொண்டதால் இந்த நீர்தேக்கத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
35 அடி உயரம் உள்ள இந்த ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்புவது வழக்கம். 760 சதுரமைல் நீர் வரத்து பரப்பளவு கொண்ட அணையில் 16 மதகுகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 40 அடி அகலம், 15 அடி அடிநீளம் கொண்ட இரும்பு ஷட்டர்கள் மூலம் அதிகபட்சமாக வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.
சுற்றுலா பயணிகள் வருகை
பூண்டி ஏரியையொட்டி தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் அருங்காட்சியகம் உள்ளது. இதனால் ஏரி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் அருங்காட்சியகத்தை பார்வையிட சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் திரளான சுற்றுலா பயனிகள் பூண்டிக்கு வந்து செல்லவதுண்டு.
இப்படி வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் பூண்டி ஏரியில் குளித்து மகிழ்வது உண்டு. இப்படி குளிக்கும் போது ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஏரியில் குளிக்கும் போது நீரில் மூழ்கி 28 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இரும்பு வேலி
தற்போது கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் உயிர்பலிகளை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூண்டி ஏரி மதகு பகுதியில் இரும்பு வேலி அமைத்துள்ளனர். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story