ஓமலூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ; பொருட்கள் எரிந்து நாசம்


ஓமலூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ; பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 8:21 PM GMT)

ஓமலூர் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ஊராட்சி ஜோடுகுளி பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 50). இவர் தனது தோட்டத்தில் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு கயிறு உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொழிற்சாலை வளாகத்தில் தென்னை நார், கயிறுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு தொழிற்சாலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. சில நிமிடங்களில் தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது. உடனே பொதுமக்கள், தொழிற்சாலை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

தீயை அணைத்தனர்

இதைத்தொடர்ந்து காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த கயிறு, தென்னை நார், நார் கழிவுகள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் அங்கிருந்த தென்னை மரங்களும் தீயில் கருகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story