கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு


கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 9:18 PM GMT)

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகிறார்கள். முக்கடலும் சங்கமிக்கும் இங்கு புனித நீராடி வழிபட்டால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. மேலும், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் போன்றவற்றை ஒரே இடத்தில் காணும் வகையில் அமைந்துள்ள சுற்றுலா தலமாக விளங்குவதால் தினமும் காலை, மாலை வேளைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

கன்னியாகுமரியை நாட்டின் முக்கிய சுற்றுலா பகுதியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்வேறு வசதிகள்

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையை மேம்பாடு செய்ய ரூ.3 கோடியே 81 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக முக்கடல் சங்கமம், நடைபாதை வசதி, கழிப்பறை, மின்விளக்கு, உடை மாற்றும் அறை, படித்துறை வசதி உள்பட பல்வேறு வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற கோடை சுற்றுலா சீசனுக்கு முன் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பாலம்

திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே இணைப்பு பாலத்திற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அது நிறைவடைந்ததும் பணிகள் தொடங்கும்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ஆன்லைன் டிக்கெட் வசதியை கொண்டுவர பரிந்துரை செய்துள்ளோம். அதில் உள்ள நடைமுறை சிக்கலை சரிசெய்த பின்னர் ஆன்லைன் டிக்கெட் வசதி நடைமுறை படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story