வண்ணாரப்பேட்டையில் பயங்கரம்: கள்ளக்காதலியின் தாய் குத்திக்கொலை; டிரைவர் கைது


வண்ணாரப்பேட்டையில் பயங்கரம்:   கள்ளக்காதலியின் தாய் குத்திக்கொலை; டிரைவர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2020 4:21 AM IST (Updated: 19 Feb 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

வண்ணாரப்பேட்டையில் கள்ளக்காதலியின் தாயை குத்திக்கொலை செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலி மற்றும் அவரது மகளுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

திருவொற்றியூர், 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர், மெயின் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 40). சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி யுவராணி(38). இவர்களுக்கு சஞ்சய்(15) என்ற மகனும், பிரியா(14) என்ற மகளும் உள்ளனர். சந்திரசேகர், மனைவியை பிரிந்து தாய் ஜெயலட்சுமியுடன் வசித்து வருகிறார். மகன் சஞ்சய் தந்தையுடன் உள்ளார்.

சந்திரசேகருக்கும், அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் தனலட்சுமி(37) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சந்திரசேகர் அவரை விட்டு பிரிந்தார்.

சரமாரியாக குத்தினார்

கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத்தொடங்கினர். ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு உறவில் விரிசல் ஏற்பட்டதால் மீண்டும் இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் தனலட்சுமி, அவரது மகள் ஷாலினி(20) அவரது தாயார் ரத்னாவதி(58) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் வீட்டுக்கு சென்றனர்.

மீண்டும் சேர்ந்து வாழ வரும்படி சந்திரசேகரிடம் கூறிய அவர்கள் பணம் தரும்படியும் அவரிடம் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது ஷாலினி, வீட்டின் முன் நிறுத்தி இருந்த சந்திரசேகருக்கு சொந்தமான வேனின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து 3 பேரையும் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார்.

டிரைவர் கைது

இதில் ரத்னாவதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ஷாலினியும், தனலட்சுமியும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபற்றி தகவல் அறிந்து சென்ற புதுவண்ணாரப்பேட்டை போலீசார், ரத்னாவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி சந்திரசேகரை கைது செய்தனர்.

Next Story