ஆவடி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை தாய் மாமன்களுக்கு போலீசார் வலைவீச்சு


ஆவடி அருகே பயங்கரம்   ஆட்டோ டிரைவர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை  தாய் மாமன்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Feb 2020 4:25 AM IST (Updated: 19 Feb 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே ஆட்டோ டிரைவர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் தப்பி ஓடிய அவரது தாய் மாமன்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவடி, 

ஆவடி அடுத்த பூம்பொழில் நகர், பார்க் தெருவை சேர்ந்தவர் புஜ்ஜி என்ற ராஜேஷ் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள இறைச்சி கடை வாசலில் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ராஜேஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ராஜேசுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு புவனேஸ்வரி, கார்த்திகா, ஜனனி ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால் சவுந்தர்யா மூன்று மகள்களையும் ராஜேஷிடம் ஒப்படைத்து விட்டு தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

தவறாக நடக்க முயன்றார்

இதையடுத்து ராஜேஷ் தனது மூன்று மகள்கள் மற்றும் அவரது தாயார் நாகராணி (61) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் ராஜேஷ் குடிபழக்கத்துக்கு அடிமையானதால், ஆட்டோ ஓட்டுவதை விட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் பணம் கேட்டு அவரது தாயாரை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக ராஜேஷின் தாய் நாகராணி மீது சந்தேகமடைந்து அவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது நாகராணி அளித்த வாக்குமூலத்தில், தனது தம்பியான வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த குணசேகரன் (58), மனைவி சுகுணாவுடன் தனது வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது சுகுணாவிடம், அத்தை என்று பாராமல் ராஜேஷ் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறினார்.

2 பேருக்கு வலை

இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரன் தனது தம்பியான சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்த முனியப்பன் (55) என்பவருடன் சேர்ந்து மருமகன் ராஜேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக தெரிவித்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த குணசேகரன் மற்றும் முனியப்பன் ஆகியோர் சேர்ந்து உருட்டுக்கட்டையால் ராஜேஷை சரமாரியாக அடித்துக்கொலை செய்தனர்.

பின்னர் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள இறைச்சி கடை வாசலில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும், இந்த சம்பவத்தை குணசேகரன் தன்னிடம் கூறியதாகவும் நாகராணி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குணசேகரன் மற்றும் முனியப்பன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story