கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வார்டு எல்லைகள் மறுவரையறை பட்டியல் - கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டார்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வார்டு எல்லைகள் மறுவரையறை பட்டியல் - கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டார்
x
தினத்தந்தி 19 Feb 2020 3:45 AM IST (Updated: 19 Feb 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்தல் தொடர்பான வரைவு பட்டியலை கலெக்டர் கிரண் குராலா வெளியிட்டார்.

கள்ளக்குறிச்சி,

தமிழ்நாடு மாநில உள்ளாட்சி அமைப்பு வார்டு மறுவரையறை ஆணையக உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்தல் தொடர்பான வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வரைவு பட்டியலை நேற்று காலை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டார். இந்த வரைவு பட்டியலானது இம்மாவட்டத்தை சேர்ந்த 412 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 3,162 சிற்றூராட்சி வார்டுகளையும், ரி‌ஷிவந்தியம் உள்பட 9 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 180 ஊராட்சி ஒன்றிய வார்டுகளையும் மற்றும் 19 மாவட்ட ஊராட்சி வார்டுகளையும், 7 பேரூராட்சிகளுக்குட்பட்ட 117 வார்டுகளையும், கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளையும் உள்ளடக்கியது. இதில் ஊரக வார்டு வரைவு முன்மொழிவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரனும், நகராட்சி வார்டு வரைவு முன்மொழிவை விழுப்புரம் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) வெங்கடாசலமும், பேரூராட்சி வார்டு வரைவு முன்மொழிவை வடக்கனந்தல் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகமும் பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் கிரண்குராலா கூறுகையில், இந்த வரைவு பட்டியல் வருகிற 22-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதன் மீது யாதொரு மறுப்புரைகளோ அல்லது கருத்துரைகளோ இருப்பின் 22-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம்.

மேலும் பெறப்படும் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளின மீது தீர்வு காணும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் 25-ந் தேதி காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்றார். நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, கள்ளக்குறிச்சி ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரெத்தினமாலா, கலெக்டருடன் கலெக்டரின் நேர்முக உதவியாள (தேர்தல்) கண்ணன், மாவட்ட ஊராட்சி செயலாளர் செந்தில்வடிவு, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) நந்தகோபாலகிரு‌‌ஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story