சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் புறக்கணிப்பு


சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்   பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2020 4:49 AM IST (Updated: 19 Feb 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் ஆகியோர் புறக்கணித்தனர்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் ஆகியோர் புறக்கணித்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய சித்தராமையா, ‘‘சட்டசபையில் எச்சரிக்கையாக பேச வேண்டும். அரசுக்கு எதிராக பேசும்போது, சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும். பட்ஜெட் உரையில் நமது ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அதனால் அந்த உரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் குறித்து குறை கூறி பேசும்போது, எச்சரிக்கையாக பேச வேண்டும். அரசின் குறைபாடுகளை எடுத்துக் கூற வேண்டும். மாநில பா.ஜனதா அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும்’’ என்று பேசியதாக தெரிகிறது.

ஒத்திவைப்பு தீர்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம், போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு 2 பேர் பலியான விவகாரம், பீதர் தனியார் பள்ளி மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கு, முன்னாள் மந்திரி யு.டி.காதருக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்கு ஆகியவை குறித்து, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் கடிதம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

Next Story