பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய போலீஸ்காரருக்கு திருமணம்


பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து   ஆணாக மாறிய போலீஸ்காரருக்கு திருமணம்
x
தினத்தந்தி 18 Feb 2020 11:33 PM GMT (Updated: 18 Feb 2020 11:33 PM GMT)

பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய போலீஸ்காரர் திருமணம் செய்து கொண்டார்.

மும்பை,

பீட் மாவட்டம் மஜல்காவ் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்தவர் லலிதா குமாரி சால்வே (வயது30). அங்குள்ள ராஜேகாவ் கிராமத்தில் பிறந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது உடம்பில் பாலின மாற்று அறிகுறிகள் உண்டாவதை அறிந்தார். மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் ஆண்மை தன்மை அதிகமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற விரும்பினார்.

லலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய விடுப்பு வழங்க மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து லலிதா மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆணாக மாறுவதற்காக 3 கட்டமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆணாக மாறினார். அதன்பின்னர் அவர் தனது பெயரை லலித் என பெயர் மாற்றிக் கொண்டார்.

திருமணம்

மராட்டிய போலீசிலும் அவருக்கு ஆண் போலீஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறிய லலித் தற்போது திருமண வாழ்க்கையிலும் அடி எடுத்து வைத்து உள்ளார். அவுரங்காபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் கரம் பிடித்து உள்ளார். இவர்களது திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எளிமையாக நடந்தது.

இதுகுறித்து லலித் கூறிய தாவது:-

மூன்று கட்ட பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எனக்கு மறுபிறப்பு கிடைத்தது. எனது திருமணத்திற்கு பின் நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி உள்ளேன்.

இப்போது மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். எனது திருமணத்தின் மூலம் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story