பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தாவூத் இப்ராகிமின் கூட்டாளி கைது வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது பிடிபட்டார்
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த தாவூத் இப்ராகிம் கூட்டாளியை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவர் வெளிநாடு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது.
மும்பை,
மும்பை ஜூகுவை சேர்ந்தவர் அஜய் தவான். கட்டுமான அதிபரான இவருக்கு கடந்த ஜூலை மாதம் பணம் கேட்டு மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் ரியாஸ் சிராஜ் (வயது55) என்பவர் கட்டுமான அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதும், இவர் தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.
மேலும் அவருக்கு போலி பாஸ்போர்ட் வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
விமான நிலையத்தில் சிக்கினார்
இதனை தொடர்ந்து போலீசார் அவரை வெளிநாடு தப்பி செல்ல விடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரியாஸ் சிராஜ் நேற்று முன்தினம் சவுதி அரேபியா நாட்டிற்கு தப்பி செல்ல மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். இவரது பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்த குடியுரிமை அதிகாரிகளுக்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று வெளிநாடு தப்பி செல்ல முயன்ற ரியாஸ் சிராஜை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story