வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறதா? கலெக்டர் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறதா? கலெக்டர் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Feb 2020 4:30 AM IST (Updated: 19 Feb 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறதா? என திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி கிராமத்தின் வழியாக செல்லும் வைகை ஆற்றுப்படுகையில் பழமையான ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே அரசு புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ளன. இவை சித்தர்கள் நத்தம் கிராம பகுதிக்குள் வரும். இந்த புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு, பகலாக லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியே பள்ளமாக காட்சி அளிக்கிறது. சட்டவிரோத மணல் கொள்ளையால், பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே திண்டுக்கல் மாவட்டம் சித்தர்கள் நத்தம் பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கவும், மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், “திண்டுக்கல் நிலக்கோட்டை சித்தர்நத்தம் பகுதியில் சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுகிறதா?“ என கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நிலக்கோட்டை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Story