நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி தட்டுப்பாடு; 50 ஆயிரம் மூடைகள் தேக்கம்


நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி தட்டுப்பாடு; 50 ஆயிரம் மூடைகள் தேக்கம்
x
தினத்தந்தி 19 Feb 2020 3:15 AM IST (Updated: 19 Feb 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

லாரி தட்டுப்பாடு காரணமாக மானா மதுரை அருகே சின்னகண்ணனூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் 50 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை, 

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழை பெய்து அனைத்து கண்மாய்களுக்கும் நிரம்பியது. இதை பயன்படுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மானாமதுரை மற்றும் அதன் அருகே உள்ள சின்னகண்ணனூரை சுற்றி சுமார் 3 ஆயிரம் எக்டேர் விளை நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடையும் முடிந்தது. இதையடுத்து இந்த நெல் மூடைகளை இப்பகுதி விவசாயிகள் அதன் அருகே உள்ள நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் தினந்தோறும் 100 முதல் 200 மூடைகள் வரை தான் நெல் கொள்முதல் செய்கின்றனர். மேலும் சிறிது நேரம் மட்டுமே அதிகாரிகள் பணியில் இருந்துவிட்டு நிலையத்தை பூட்டிச் செல்கின்றனர். மானாமதுரை வட்டாரத்தில் சின்னகண்ணனூர், மாங்குளம், எஸ்.காரைக்குடி, ராஜகம்பீரம், முத்தனேந்தல் ஆகிய இடங்களில் அரசு சார்பில் தற்காலிக நெல் கொள் முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெறப்படும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான சாக்கு பைகளில் 40 கிலோ எடை கொண்ட மூடையாக கட்டிய நிலையில், பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது சாக்கு பைகள் தட்டுப்பாடு மற்றும் இங்கிருந்து நெல் மூடைகளை வாணிப கிட்டங்கிக்கு எடுத்துச் செல்ல லாரி தட்டுப்பாடு காரணமாக அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவு நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

மேலும் இங்கு ஏற்கனவே விவசாயிகளிடம் வாங்கிய சுமார் 50 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கமடைந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த கொள்முதல் நிலையத்தில் சின்னகண்ணனூர், புலிக்குளம், மானம்காத்தான், கிருஷ்ணபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் அங்குச்சாமி கூறியதாவது:-

சின்னகண்ணனூர் பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் லாரிகள் தட்டுப்பாட்டால் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்ட 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல்மூடைகள் பகலில் வெயிலிலும், இரவு நேரத்தில் பனியிலும் இருந்து வருகிறது. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் இந்த நிலையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நெல் மூடைகள் வழங்கிய விவசாயிகளுக்கு இதுவரை அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. மேலும் இந்த கொள்முதல் நிலையத்தில் போதிய சாக்கு பைகள் இல்லை என்றும், மூடைகளை வாணிப கிட்டங்கிக்கு எடுத்து செல்ல போதிய சரக்கு லாரிகள் கிடைக்கவில்லை என்று கூறி அதிகாரிகள் இங்குள்ள விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை தனியார் வியாபாரிகளிடம் அடிமட்ட விலைக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story