திருமங்கலத்தில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை? கொலை என உறவினர்கள் போராட்டம்


திருமங்கலத்தில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை? கொலை என உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2020 4:30 AM IST (Updated: 19 Feb 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரை அடித்துக் கொலை செய்து விட்டதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம்,

தேனி மாவட்டம், உத்தம பாளையம் அருகே உள்ள ஓடப்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவருடைய மனைவி விசாலாட்சி. இவர்களது மகள் மீனாட்சி (வயது 26). இவருக்கும், திருமங்கலம் சோனை மீனா நகரைச் சேர்ந்த மகாகணபதி (30) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளன. மகா கணபதி எல்லீஸ்நகர் மின் வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மீனாட்சி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் உடலை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் நேற்று மதியம் உடலை வாங்க மறுத்து மீனாட்சியின் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரதட்சணை கொடுமை செய்து மீனாட்சியை அடித்து கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

தகவலறிந்த திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, இந்த சம்பவத்தில் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து அறிக்கை அளிப்பார் என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மீனாட்சியின் உடலை வாங்கிக் கொண்டு அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Next Story