ஒபேரா ஹவுஸ் பகுதியில் 15-வது மாடியில் இருந்து குதித்து வைர வியாபாரி தற்கொலை


ஒபேரா ஹவுஸ் பகுதியில்   15-வது மாடியில் இருந்து குதித்து வைர வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2020 5:27 AM IST (Updated: 19 Feb 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஒபேரா ஹவுஸ் பகுதியில் உள்ள 15 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து வைர வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

மும்பை, நேப்பியன் சீ ரோடு பகுதியில் வசித்து வந்தவர் வைர வியாபாரி திரேன் ஷா (வயது61). இவர் வைரத்தை பட்டை தீட்டுதல் மற்றும் ஏற்றுமதி தொழில் செய்து வந்தார். திரேன் ஷாவின் வைர நிறுவன அலுவலகம் தென்மும்பை ஒபேரா ஹவுஸ் பகுதியில் உள்ள 15 மாடி கட்டிடத்தில் அமைந்து உள்ளது.

நேற்று காலை வைர வியாபாரி வழக்கம் போல 15-வது மாடியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றார். காலை 10 மணியளவில் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று வருவதாக வைர வியாபாரி அலுவலக ஊழியா்களிடம் சொல்லிவிட்டு சென்று உள்ளார்.

இந்தநிலையில் அவர் திடீரென அங்கு இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்கொலை கடிதம்

தகவல் அறிந்து சென்ற போலீசார் வைர வியாபாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது வைர வியாபாரி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் அவர், “எனது சாவுக்கு நான் மட்டுமே காரணம். வேறு யாரும் இல்லை” என எழுதி இருந்தார். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் வைர வியாபாரிக்கு தொழிலில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டு அவர் மிகுந்த நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்த வைர வியாபாரி திரேன் ஷாவுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் அமெரிக்காவில் இருந்து குடும்பத்தின் வைர தொழிலை கவனித்து வருகிறார். 15 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து வைர வியாபாரி தற்கொலை செய்த சம்பவத்தால் நேற்று ஒபேரா ஹவுஸ் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story