கோவை உள்பட 7 இடங்களில் கைவரிசை : 5 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது - ரூ.1 கோடி நகை, காா்கள் பறிமுதல்


கோவை உள்பட 7 இடங்களில் கைவரிசை : 5 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது - ரூ.1 கோடி நகை, காா்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Feb 2020 4:15 AM IST (Updated: 19 Feb 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

கோவை உள்பட 7 இடங்களில் கைவரிசை காட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள நகை, கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

கோவை துடியலூர் அருகே இடையர்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 57). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் தனது மகள் திருமணத்துக்காக வீட்டில் வைத்து இருந்த 137 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.15 லட்சம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளைபோனது.

இதில் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, துப்பு துலக்கினர். இதில், கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த ராஜசேகர் (38), தென்காசி மாவட்டம் குற்றாலத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற கருவாட்டு மாரியப்பன் (34), நெல்லை சிந்துபூந்துறையை சேர்ந்த பாண்டித்துரை என்ற புலிப்பாண்டி (26), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சுரேஷ் என்ற பட்டறை சுரேஷ் (29) மற்றும் ஈரோடு வெப்படையை சேர்ந்த சுரேஷ் என்கிற சுள்ளான் சுரேஷ் (31) ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 237 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கைதுசெய்யப்பட்ட 5 பேர்கொண்ட கும்பலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்கள் பல்வேறு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த போது நட்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் வெளியே வந்து கும்பலாக சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையடித்து உள்ளனர்.அவர்கள், பகலில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் அந்த வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.அதன்படி கோவை துடியலூரில் 4 வீடு, ஈரோட்டில் ஒரு வீடு, ஓசூருவில் ஒரு வீடு, கேரளாவில் ஒரு வீடு என 7 இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். கொள்ளையடித்த நகை, பணத்தை கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தற்போது போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story