இறந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு ரூ.17 ஆயிரம் நிதி உதவி - கலெக்டர் வழங்கினார்


இறந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு ரூ.17 ஆயிரம் நிதி உதவி - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 19 Feb 2020 3:30 AM IST (Updated: 19 Feb 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

இறந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு ரூ.17 ஆயிரம் நிதி உதவியை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

சிவகங்கை,

மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலக்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனைப்பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கி கடன், மாவட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோருதல், பட்டா ரத்து தொடர்பான மேல் முறையீடு, மின் இணைப்பு தொடர்பாக மனுக்கள் உள்பட 321 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் பெறப்பட்ட இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

மேலும் கூட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசி என்பவர் மாற்றுத்திறனாளியான தனது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதாகவும், இதுவரை தங்கள் குடும்பத்திற்கு உதவி தொகை எதுவும் கிடைக்கவில்லை என்று கோரி மனு ஒன்று கொடுத்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவித் தொகை ரூ.17 ஆயிரத்திற்கான காசோலையை அவரிடம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் காளிமுத்தன் மற்றும் அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story