தரமணி-சிறுசேரி இடையே உயர்மட்ட சாலை-சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. கோரிக்கை
போக்குவரத்து நெரிசலால் அரை நாள் வீணாவதால் தரமணி முதல் சிறுசேரி வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று சட்ட சபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் பேசியதாவது:-
எனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் பெருகி வருகின்றன. வேறு மாநிலத்தவர் பணியாற்றுவதால் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், வேங்கைவாசல், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சி பகுதிகள், சென்னையை போல வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே அங்கு பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள், சாலைகள், தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தரவேண்டும்.
குப்பையால் பாதிப்பு
மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மாணவ, மாணவிகள் படித்து வருவதால், பெண்களுக்காக தனியாக ஒரு மேல்நிலைப்பள்ளியை அமைக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் சேரும் குப்பைகள் பெருங்குடியில் கொட்டப்படுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் மாசினால் பாதிக்கப்படுகிறது. எனவே மறுசுழற்சி முறையில் அங்குள்ள குப்பைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர். சாலைகளில் ஏ.சி. பஸ்களை அதிகமாக இயக்க வேண்டும். அங்கு நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்பட வேண்டும். பாலவாக்கம் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
சுங்கச்சாவடி வசூல்
மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ வசதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் அதை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
துரைப்பாக் கம் 200 அடி ரேடியல் சாலை, சோழிங்க நல்லூர் கே.கே.ஆர். இணைப்பு சாலை, மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இணைப்பு சாலைகளில் 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒப்பந்தம் இல்லாத நிலையில் விதிகளுக்கு முரணாக பணம் வசூல் செய்கின்றனர். அவற்றை உடனே அகற்ற வேண்டும்.
உயர்மட்ட சாலை
தகவல் தொழில்நுட்ப சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தரமணி முதல் சிறுசேரி வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
அங்கு மெட்ரோ ரெயில் வழித்தடமும் அமைக்கப்படும் என்று 2018-ல் அறிவிக்கப்பட்டது. இந்த சாலையில் தொடர்ந்து கடும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதால் அரை நாள் வீணாகிவிடுகிறது. எனவே தரமணி-சிறுசேரி இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும். கோவிலம்பாக்கம், மேடவாக்கம் பகுதியில் உள்ள 2 சந்திப்புகளில் நடக்கும் மேம்பாலப் பணிகளை உடனே முடிக்க வேண்டும்.
நில உச்சவரம்பை ரத்துசெய்த பிறகும், மடிப்பாக்கம் பகுதியில் சில இடங்களில் பட்டா பெறமுடியாத நிலை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story