எண்ணேகொல்புதூர்-படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் மனு


கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரியான படேதலாவ் ஏரி நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது
x
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரியான படேதலாவ் ஏரி நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது
தினத்தந்தி 19 Feb 2020 6:59 AM GMT (Updated: 19 Feb 2020 6:59 AM GMT)

எண்ணேகொல்புதூர்-படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தனர்.

விவசாயிகள் மனு
கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகரை, நேரில் சந்தித்த 36 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் படேதலாவ் ஏரி கால்வாய் திட்ட பயனாளிகள் குழுவினர், மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிரு‌‌ஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் 269 ஏக்கர் பரப்பளவில் படேதலாவ் ஏரி (பெரிய ஏரி) அமைந்துள்ளது. மார்க்கண்டேய நதியில் இருந்து கால்வாய் மூலம் இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் மூலம் கிரு‌‌ஷ்ணகிரி ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில் உள்ள 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால் மார்க்கண்டேய நதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றதால் படேதலாவ் ஏரியும் வறண்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொல்புதூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என கிரு‌‌ஷ்ணகிரி, பர்கூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

பாசன வசதி பெறும்
எண்ணேகொல்புதூர் அணைகட்டில் வலது மற்றும் இடதுபுறத்தில் இருந்து புதிய கால்வாய் அமைத்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.276 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில், படேதலாவ் ஏரிக்கு அமைக்கப்பட உள்ள புதிய இடதுபுற பிரதான கால்வாயின் நீளம் 23 கிலோ மீட்டர். இதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் செயல்படாமல், தாமதமாகி வருகிறது.

இந்த திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டால், பர்கூர் மற்றும் கிரு‌‌ஷ்ணகிரி, மத்தூர் ஒன்றியங்களில் சுமார் 75 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story