ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நெல்லையப்பர் கோவில் நிலம் மீட்பு
நெல்லை அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நெல்லையப்பர் கோவில் நிலம் மீட்கப்பட்டது.
நெல்லையப்பர் கோவில்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளன. கோவிலை சுற்றி ஏராளமான கடைகள் இருக்கின்றன. இதில் மானூர் பகுதியில் உள்ள ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
தென்கலம் பகுதியில் 100-க்கும் அதிகமாக ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்கள் உள்ளன. தாழையூத்து அருகே உள்ள புளியங்கொட்டாரம் கிராமத்தில் அதே ஊரைச் சேர்ந்த பாலையா என்பவர் சுமார் 3 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி தடுப்பு வேலி அமைத்தார்.
இதுகுறித்து மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அந்த இடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதையடுத்து நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, மானூர் தாசில்தார் மோகன், துணை தாசில்தார் மாரியப்பன், தென்கலம் நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் ஊழியர்கள் வேலிகளை அகற்றினர். பின்னர் அந்த இடம் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story