நெல்லை–தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் 25–ந் தேதி நடக்கிறது
நெல்லை–தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் வருகிற 25–ந் தேதி நடக்கிறது.
நெல்லை,
நெல்லை–தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் வருகிற 25–ந் தேதி நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கருத்து கேட்பு கூட்டம்
தமிழ்நாடு மறுவரையறை ஆணையச் சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறை விதிகள் 2017–ன்படி 2011–ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை மாநகராட்சில் உள்ள 55 வார்டுகள், 2 நகராட்சிகளில் உள்ள 42 வார்டுகள், 18 பேரூராட்சிகளில் உள்ள 294 வார்டுகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 1,731 கிராம ஊராட்சி வார்டுகள், 122 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 12 மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை வரைவு குறித்தான கோரிக்கை மனுக்கள் நேற்று முன்தினம் முதல் வாங்கப்படுகிறது. இந்த மனுக்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை பெறப்பட உள்ளது.
இந்த கோரிக்கைகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட மறுவரையறை அலுவலரால் வருகிற 25–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக 2–ம் தளத்தில் வைத்து நடைபெற உள்ளது. மறுவரையறை வரைவின் மீது கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தென்காசி மாவட்டம்
இதேபோல் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் உள்ள 153 வார்டுகள், 18 பேரூராட்சிகளில் உள்ள 278 வார்டுகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 1,905 கிராம ஊராட்சி வார்டுகள், 144 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 14 மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரையறை வரைவு குறித்த கோரிக்கை மனுக்கள் நேற்று முன்தினம் முதல் வாங்கப்படுகிறது. இந்த மனுக்கள் நாளை மறுநாள் வரை பெறப்பட உள்ளது.
இந்த கோரிக்கைகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட மறுவரையறை அலுவலரால் வருகிற 25–ந் தேதி காலை 10 மணிக்கு குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற உள்ளது. மறுவரையறை வரைவின் மீது கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story