இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் தொடங்க கோரி கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல்


இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் தொடங்க கோரி கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 19 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-19T20:01:47+05:30)

கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் தொடங்க கோரி, கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல் 

கடந்த 2008–ம் ஆண்டு நெல்லை மாவட்டம் குருவிகுளம் யூனியனில் இருந்த இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 பஞ்சாயத்துகள், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. எனினும் அந்த பஞ்சாயத்துகளில் ஊரக உள்ளாட்சி துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருவிகுளம் யூனியன் அலுவலகத்துக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது குருவிகுளம் யூனியன், தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.

எனவே இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 பஞ்சாயத்துகளையும் கோவில்பட்டி யூனியனுடன் சேர்க்க வேண்டும். அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியனை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு 

தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, பொதுச்செயலாளர் பரமேசுவரன், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு), பத்மாவதி (அனைத்து மகளிர்), தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Next Story