திருச்செந்தூரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை சப்–கோர்ட்டு தீர்ப்பு
திருச்செந்தூரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சப்–கோர்ட்டில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சப்–கோர்ட்டில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளம் காளைச்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 49). கூலி தொழிலாளியான இவர் கடந்த 6.6.2011 அன்று தன்னுடைய உறவினர்கள், நண்பர்களுடன் வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் அருகில் சென்றபோது, அந்த வழியாக சென்ற காரின் மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதியது.
இதையடுத்து காரில் இருந்தவர்களிடம், சேகர் உள்ளிட்ட 12 பேர் தகராறு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காளீசுவரன் விரைந்து சென்று, அங்கிருந்த அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தார்.
அப்போது ஆத்திரம் அடைந்த சேகர் உள்ளிட்ட 12 பேரும் சேர்ந்து காளீசுவரனை அவதூறாக பேசி, இரும்பு கம்பியால் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சேகர் உள்ளிட்ட 12 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 ஆண்டு சிறை
இந்த வழக்கு திருச்செந்தூர் சப்–கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் ஒருவர் இறந்து விட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரமேசுவரி, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கிய சேகருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். மற்ற 10 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக ரவிச்சந்திரன் ஆஜரானார்.
Related Tags :
Next Story